ராட்சத கிரேன் மூலம் தமிழக அமைச்சரும் மதுரவாயில் தொகுதி அதிமுக வேட்பாளருமான பெஞ்சமினுக்கு 25 அடி நீள மாலையைத் தொண்டர்கள் அணிவித்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதற்கிடையே சென்னை மதுரவாயல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிடுகிறார்.
அவர் இன்று மதுரவாயல், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அவர் பேசுகையில், ''மீண்டும் அதிமுக வெற்றி பெற்றவுடன், அனைத்து மக்களுக்கும் இலவசமாக வாஷிங்மெஷின் வழங்கப்படும். வெற்றி பெற்ற 100 நாட்களுக்குள் மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளுக்குப் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும்'' என்று அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு ராட்சத கிரேன் மூலம் 25 அடி நீள மாலையைத் தொண்டர்கள் அணிவித்தனர். இதற்கிடையே நேற்று அமைச்சர் பெஞ்சமின் போரூர், காரப்பாக்கத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். காரப்பாக்கம் பகுதியில் இஸ்திரி கடைக்குச் சென்ற அவர், துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.