ஒரு நிமிட வாசிப்பு

எலெக்‌ஷன் கார்னர்: அடேங்கப்பா அண்ணாச்சி!

செய்திப்பிரிவு

இம்முறையும் அருப்புக்கோட்டை தொகுதியில் களம் காணும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சிக்கு மிகப்பெரிய பலமே தொகுதியில் உள்ள நாயுடு சமூகத்தினரின் வாக்கு வங்கி தான். குறிப்பாக, பிரபல ஜெயவிலாஸ் பஸ் கம்பெனியின் ஆதரவிலேயே அண்ணாச்சி இதுவரைக்கும் வெற்றிக்கொடி நாட்டி வந்தார்.

ஆனால், இம்முறை ஜெயவிலாஸ் குடும்பத்து மருமகளான உமாதேவி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அருப்புக்கோட்டையில் போட்டியிடுகிறார். தங்களது நிறுவனம் சார்ந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களை நம்பியே உமாதேவி களத்தில் நிற்கிறார். இதனால் தனது வெற்றிக்குப் பங்கம் வருமே என யோசித்த அண்ணாச்சி அற்புதமாய் ஒரு காரியம் செய்திருக்கிறார். ஜெயவிலாஸ் குடும்பத்தில் மொத்தம் ஐந்து வாரிசுகள்.

இதில், டி.ஆர்.சுப்பாராஜின் மருமகள் தான் உமாதேவி. இன்னொரு வாரிசான டி.ஆர்.வரதராஜனின் மகன் ராம்குமாரும் உதயநிதி ஸ்டாலினும் லயோலா காலேஜ் நண்பர்களாம். இதை கண்டுபிடித்த அண்ணாச்சி, கடந்த 24-ம் தேதி உதயநிதி அருப்புக்கோட்டை பிரச்சாரத்துக்கு வந்தபோது, ராம்குமாரை தொடர்பு கொண்டு, “உதயநிதிக்கு உங்க பண்ணை வீட்ல தாம்பா லஞ்ச்” என்று தந்திரமாக ஃபிக்ஸ் பண்ணிவிட்டாராம். உதயநிதியே தங்களது வீட்டுக்கு வருகிறார் என்றதும் ஜெயவிலாஸ் குடும்பத்தால் பதிலேதும் பேசமுடியவில்லை.

ஜெயவிலாஸ் குடும்பம் இம்முறையும் தனக்கு ஆதரவாகவே இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காக பண்ணை வீடு வரைக்கும் கொடிகளைக் கட்டி அமர்க்களப்படுத்தி விட்டார் அண்ணாச்சி. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில், தங்கள் வீட்டுக்கு வந்த உதயநிதியை வரவேற்க உமாதேவியின் கணவர் விஜய்ராமும் மகன் பிரேம் சுப்பாராஜும் முதல் ஆளாக வந்து நின்றதுதான்!

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT