காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.யு.அசனாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை (மார்ச் 30) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை பிரதமர் அறிமுகம் செய்து வைப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளோர் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டியது அவசியம் என்ற நிலையில், இன்று (மார்ச் 29) காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கே.ஏ.யு.அசனா ரேபிட் கிட் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை காரைக்கால் மாவட்ட சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.
இதனால் அவர் பிரதமர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.