நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் நடனமாடி, அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டினார்.
தமிழக பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்தவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகத்தில் துணை ஆணையராகப் பணியாற்றினார். பின்னர் தனது ஐபிஎஸ் பதவியை உதறிவிட்டு தமிழகம் வந்து விவசாயம் செய்யப் போவதாகவும் மக்கள் சேவை ஆற்ற உள்ளதாகவும் அறிவித்தார்.
ஆனால், திடீரென அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அவருக்கு ஆதரவாகத் தமிழக முதல்வர் பழனிசாமி அரவக்குறிச்சி வந்து பிரச்சாரம் செய்தார். அண்மையில் நடிகை நமீதா அண்ணாமலைக்காகப் பிரச்சாரம் செய்த நிலையில், பாஜக கலைப்பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்காக நேற்று, நஞ்சை காளக்குறிச்சி, புஞ்சை காளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது தேர்தல் வாகனத்தில் இருந்து இறங்கிய காயத்ரி ரகுராம், உற்சாகத்துடன் கிராமத்து மக்களுடன் சேர்ந்து நடனமாடத் தொடங்கினார். சிறிது நேரத்தில் அண்ணாமலையும் கிராமத்தினருடன் சேர்ந்து நாட்டுப்புறப் பாடலுக்கு நடனமாடினார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அதிக வரவேற்பைப் பெறவும், வேட்பாளர்களும் நட்சத்திரப் பேச்சாளர்களும் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.