காங்கிரஸ் கட்சியில் பலரும் பலவிதமான கோட்டாக்களில் சீட் பிடித்திருப்பதாக பகிரங்க சர்ச்சைகள் வெடித்துவரும் நிலையில், கள்ளக்குறிச்சி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் குறித்தும் காங்கிரஸுக்குள் சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிட காங்கிரஸில் வாய்ப்புக் கிடைக்கும் என நம்பினார் மணிரத்தினம். ஆனால், சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து அதிரடியாக பாமகவில் சேர்ந்து, பாமக வேட்பாளராக சிதம்பரத்தில் போட்டியிட்டு தோற்றார். அதன் பிறகு மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பியவர், இம்முறை காட்டுமன்னார்கோவில் (இதுதான் இவரது சொந்த ஊர்) தொகுதிக்காக அழகிரியிடம் அட்வான்ஸ் புக்கிங் செய்து வைத்திருந்தாராம்.
ஆனால், அந்தத் தொகுதி விசிகவுக்குப் போய்விட்டதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கள்ளக்குறிச்சி தொகுதியை மணிரத்னத்துக்குத் தந்துவிட்டாராம் அழகிரி. “கள்ளக்குறிச்சியை காங்கிரஸுக்கு கேட்டது யார், அப்படியே கேட்டிருந்தாலும் அந்தத் தொகுதியில் ஒரு காங்கிரஸ்காரர்கூடவா இல்லை, எதற்காக காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த மணிரத்னத்தைக் கொண்டு
போய் நிறுத்தினீர்கள்... இதன் பின்னணியில் நடந்தது என்ன?” என்று கேட்டு காங்கிரஸுக்குள் சிலர் அழகிரிக்கு எதிராக புயலைக் கிளப்புகிறார்களாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.