அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஓடை தடுப்பணை சேற்றில் சிக்கி 2 சிறுமி உட்பட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
செந்துறை அடுத்த மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சுதாகர், ஜெயசீலன். இருவரும் அண்ணன் - தம்பிகள். சுதாகருக்கு சுடர்விழி (7) என்ற பெண் குழந்தையும், ஜெயசீலனுக்கு சுருதி (9), ரோஹித் (6) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.
இவர்கள் 3 பேரும் இன்று (மார்ச் 24) வீட்டின் அருகேயுள்ள சின்னஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், உடலை மீட்டனர். அப்போது மூவரும் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து, செந்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவன் உயிரிழந்தது அக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.