ஒரு நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு: பலர் பலியானதாக தகவல்

ஏஎஃப்பி

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து காவல்துறை தரப்பில், "கொலராடோ தலைநகர் டென்வர் நகருக்கு வடமேற்காக 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடி.

இங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சுகிறோம். இறந்தவர்களில் ஒரு காவலரும் இருக்கிறார் என்பது வேதனையான செய்தி. சம்பவ இடத்திலிருந்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளோம்.

இன்னும் அப்பகுதி முழுமையாக எங்களின் கட்டுப்பாட்டில் வராததால் பலி எண்ணிக்கை விவரம் உறுதியாகத் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

அங்காடியிலிருந்து தப்பித்து வெளியேறிய நபர் ஒருவர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ”கடைக்குள் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. 3 பேர் தரையில் விழுந்துகிடந்தனர். இருவர் கார் பார்க்கிங் பகுதியிலும் ஒருவர் நுழைவாயிலிலும் கிடந்தனர். அவர்கள் உயிருடன் தான் இருந்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

இதனால் பலரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT