திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று (19-ஆம் தேதி) நிறைவு பெற்றது.
இதில், வாணியம்பாடி தொகுதியில் 29 பேர், ஆம்பூர் தொகுதியில் 21 பேர், ஜோலார்பேட்டை தொகுதியில் 28 பேர், திருப்பத்தூர் தொகுதியில் 35 பேர் என மொத்தம் 113 வேட்புமனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற்றது. இதில், திருப்பத்தூர் தொகுதிக்கான மனுக்கள் பரிசீலனை சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வந்தனா கர்க் தலைமையில் நடைபெற்றது.
இதில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ரபீக் அஹ்மது என்பவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது வேட்புமனுவை முன்மொழிந்த 10 நபர்களில் இரண்டு வாக்காளர்கள் திருப்பத்தூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக ரபீக் அஹ்மது கூறும்போது, ‘‘மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறேன். மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிட மனு செய்துள்ளேன். என்னுடைய மனுவில் முன்மொழிந்த நபர்களின் 2 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்துவிட்டனர். இதுகுறித்து கட்சி தலைமையிடம் கூறி விட்டேன். அவர்கள் பதில் கூறுவதாக தெரிவித்துள்ளனர்’’ என்று கூறினார்.