பழநியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா. 
ஒரு நிமிட வாசிப்பு

திமுக வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்: பழநியில் நடிகை விந்தியா பிரச்சாரம்

பி.டி.ரவிச்சந்திரன்

பழநியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா, திமுக வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா பழநி, ஒட்டன்சத்திரம், வடமதுரை, திண்டுக்கல், நத்தம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பழநியில் அதிமுக வேட்பாளர் ரவிமனோகரனை ஆதரித்து அவர் பேசியதாவது:

திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பவேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அனைவருக்கும் இரண்டு சென்ட் நிலம் தருவதாக சொன்னதை செய்யவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள், பொங்கல்பரிசுத்தொகை, மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்தையும் சாதித்து காட்டியுள்ளது.

தேர்தல் அறிக்கையில் ஆறு விலையில்லா சிலிண்டர், அரசு வேலை, பெண்களுக்கு உதவித்தொகை தருவதாக கூறியுள்ளார். அனைத்தையும் உறுதியாக செய்வார்.

பத்தாண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் திமுகவினர் அனைவரும் வருமானம் இன்றி உள்ளனர்.

நாகூர் தர்காவிற்கு சந்தனகட்டைகளை வழங்கியும், ஜெருசேலம் செல்ல உதவித்தொகை வழங்கியும், கோயில்களில் அன்னதானம் வழங்கி சமூகநீதி காத்தவர் ஜெயலலிதா.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின்போது பழநி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் மற்றும் அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT