சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி இளையான்குடியில் அதிமுக கூட்டத்தில் உரிய மரியாதை கொடுக்கவில்லை எனக் கூறி பாஜகவினர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடியில் உள்ள தனியார் மகாலில் நேற்று அதிமுக கூட்டணி கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த பாஜகவினர், மகாலில் பாஜக கொடி கட்டாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மகாலில் அவர்கள் அமர்வதற்கு இருக்கைகளும் இல்லை.
இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினர், தங்களுக்கு அதிமுகவினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி மகாலை விட்டு வெளியேறினர். பிறகு அவர்களை அதிமுக நிர்வாகிகள், பாஜகவினரை சமரசப்படுத்தினர்.
ஆனால் அவர்களிடம் கூட்டணிக் கட்சியினருக்கு இருக்கைகள் கூட தராதது அதிர்ச்சி அளிப்பதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
அப்போது அதிமுகவினர் கூறுகையில், ‘மகால் சிறிதாக இருப்பதால் அமர இடமில்லாமல் போனது. மேலும் இக்கூட்டம் அதிமுக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பதால் பாஜக கொடி கட்டவில்லை,’ என்று கூறினர். இதை ஏற்க மறுத்து பாஜவினர் தொடர்ந்து வெளிநடப்பில் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்ததும் அங்கு வந்த வேட்பாளர் நாகராஜன் பாஜகவினரை சமரசப்படுத்தினார். இனி இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்வதாக கூறினார். இதையடுத்து பாஜகவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.