ஒரு நிமிட வாசிப்பு

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் 20 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் இன்று திடீரென 20 குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தஞ்சாவூர் வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலை பகுதியில் ராஜா கோரி சுடுகாடு உள்ளது. இதன் அருகே ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று பிற்பகல் அய்யாவு முத்தழகு என்பவரது வீட்டின் மேற்கூரையில் திடீரெனத் தீ பரவியது.

ஓலையால் கூரை வேயப்பட்டிருந்ததால், தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி, பற்றி எரியத் தொடங்கியது. இதில் 20 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். 3 தீயணைப்பு வாகனங்களுடன் போராடி, தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் வீட்டில் சமையல் செய்யும்போது கூரையில் நெருப்புப் பற்றியதாகவும் விபத்தில் நான்கு வீடுகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மேலும் பரவியதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தீ விபத்தால் ஏற்பட்ட சேத மதிப்பை வருவாய்த் துறையினர் கணக்கிட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT