சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தமிழரசியை எதிர்த்து, சீட் கேட்டு கிடைக்காத சிலர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
மானாமதுரை ( தனி) சட்டப்பேரவைத் தொகுதியை 1989-ம் ஆண்டுக்கு பிறகு திமுக கைப்பற்ற முடியவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு மதுரை மாவட்டம் சமயநல்லூர் (தனி) தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்த தமிழரசி 2011-ம் ஆண்டு தேர்தலில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
அதன்பிறகு 2016 -ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2019-ம் ஆண்டு இடைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட திமுகவில் 32 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழரசிக்கே சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு சீட் கிடைக்காத உள்ளூர் நிர்வாகிகள் சிலர், தமிழரசிக்கு சீட் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களில் சிலர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு படிவத்தை வாங்கிச் சென்றனர்.
அவர்கள் தனித்து போட்டியிட்டால் திமுக வேட்பாளர் தமிழரசிக்கு அது சிக்கலை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.