ஒரு நிமிட வாசிப்பு

மேலிடம் முடிவுக்கு பிறகே நயினார் நாகேந்திரன் பாஜக வேட்பாளர்: சி.டி.ரவி தகவல்

செய்திப்பிரிவு

நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் கட்சி மேலிடம் முடிவுசெய்த பிறகே அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தகவல் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 10-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலி உள்ளிட்ட 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. எனினும் பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. இப்பட்டியல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிடையே பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், 'நயினார் நாகேந்திரனின் ஜாதகப்படி இன்று அவருக்கு நல்ல நாள். அதனால்தான் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் அவரும் ஒருவர்.

கட்சியின் ஆட்சிமன்ற குழு கூடி தான் வேட்பாளரை முடிவு செய்யும். அதன் பிறகே தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.'' என்று சி.டி.ரவி தெரிவித்தார்.

கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.லட்சுமணனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வியைத் தழுவினார். இம்முறையும் திமுக சார்பில் ஏ.எல்.லட்சுமணன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT