ஒரு நிமிட வாசிப்பு

தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கும் ‘பேரன்கள்’

செய்திப்பிரிவு

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக திமுகவின் மறைந்த தலைவர்கள் கருணாநிதி மற்றும் அன்பழகன் ஆகியோரின் பேரன்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அ.வெற்றியழகன் இருவரும் ஒன்றாகக் களமிறங்குகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுகவில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களைத் தவிர்த்து திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் வெளியிட்டார்.

இதில் 'கலைஞர்' என்று திமுக தொண்டர்களால் அழைக்கப்படும் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார். 'பேராசிரியர்' க.அன்பழகனின் பேரன் அ.வெற்றியழகன் வில்லிவாக்கம் தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணிச் செயலாளராகவும், அ.வெற்றியழகன் திமுக வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளராகவும் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT