பாஜக, காங்கிரஸ் நேரடி போட்டியால் தேசிய அரசியல் களமாக காரைக்குடி தொகுதி மாறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது. இவர் ஏற்கெனவே 2001-ம் ஆண்டு காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்.
மேலும் இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோற்றார்.
மேலும் திமுக கூட்டணியில் காரைக்குடி தொகுதி மீண்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இத்தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸைச் சேர்ந்த கே.ஆர்.ராமசாமி உள்ளார்.
இந்த தேர்தலில் போட்டியிட கே.ஆர்.ராமசாமி, தொழிலதிபர் படிகாசு மகன் பாலு, சங்கராபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடி உள்ளிட்டோர் சீட் கேட்டுள்ளனர்.
இந்த தொகுதியில் பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதுவதால், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியை போன்று காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியும் தேசிய அரசியல் களமாக மாறியுள்ளது.