திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி அதிமுகவை நிராகரிப்போம் என்று பதாகை ஏந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட முக்குலத்தோர் புலிப்படையினர். 
ஒரு நிமிட வாசிப்பு

கிராமம், கிராமமாக அதிமுகவை நிராகரிப்போம் என பிரச்சாரத்தை தொடங்கிய கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை

இ.ஜெகநாதன்

அதிமுகவில் இருந்து விலகிய கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர் கிராமம், கிராமமாகச் சென்று அதிமுகவை நிராகரிப்போம் என பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், நடிகருமான கருணாஸ் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அதேபோல் இந்தமுறையும் தனக்கு ஒரு சீட் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அதிமுக கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் திமுகவும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து திமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர் கிராமம், கிராமமாக சென்று ‘சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை நிராகரிப்போம்’ என்று பதாகை ஏந்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றியம் வேட்டங்குடிப்பட்டி, குண்டேந்தல்பட்டி, மேலயான்பட்டி, கிருஷ்ணம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி மாவட்டத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் அக்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரத்தில் அவர்கள் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து முக்குலத்தோர் சமூகத்திற்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்து வருகிறது. இதனால் இந்த தேர்தலில் அதிமுகவை நிராகரிப்போம், என்று பேசினர்.

SCROLL FOR NEXT