கோயிலுக்குள் விரிக்கப்பட்ட தென்னை நார் தரை விரிப்பில் நடந்துசெல்லும் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து உள்ளிட்டோர். 
ஒரு நிமிட வாசிப்பு

வெயில் சுட்டெரிப்பதால் ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் நடந்து செல்ல சிறப்பு ஏற்பாடு

ஜெ.ஞானசேகர்

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தென்னை நாரால் ஆன தரை விரிப்புகள் கோயில் வளாகத்துக்குள் விரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தினமும் இருக்கும். தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் கோயிலுக்குள் பக்தர்கள் தரையில் நடந்து செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர்.

இதைக் கவனித்த கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் தரை விரிப்புகளை விரிக்க நடவடிக்கை எடுத்தார். இதன்படி, கோயில் வளாகத்தில் பக்தர்கள் நடக்கும் பகுதி முழுவதும் உபயதாரர்களின் உதவியுடன் வெயிலில் அதிகம் சூடு ஏறாத- தென்னை நாரால் தயாரிக்கப்பட்ட 4 அடி அகலத் தரைவிரிப்புகள் இன்று விரிக்கப்பட்டன. இதன்மூலம் பக்தர்கள் இனி வெயிலில் சிரமமின்றி நடந்து செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர், கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, தென்னை நார் தரை விரிப்பில் நடந்து சென்று அதன் தன்மையை ஆய்வு செய்தார்.

அப்போது, கோயில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, கண்காணிப்பாளர் எம்.வேல்முருகன், அறங்காவலர் கே.என். சீனிவாசன், கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT