வளரும் குழந்தைகளுக்கு துரித உணவுகளை வாங்கிக் கொடுப்பதை கைவிட்டு, நமது பாரம்பரிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் இன்றுமாலை கொண்டாடப்பட்டது. விழாவினை புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்து பேசியதாவது:
மகளிர் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வளரும் குழந்தைகளுக்கு பீட்சா, பர்க்கர் உள்ளிட்ட துரித உணவுகளை வாங்கிக் கொடுப்பதை கைவிட்டு, நமது பாரம்பரிய உணவாகவும், ஊட்டச்சத்துள்ள நிறைந்துள்ளதாகவும் இருக்கும் பொறிஉருண்டை, கடலை மிட்டாய், பொட்டுக்கடலை உருண்டைகளை சாப்பிட கொடுக்க வேண்டும்.
மகளிர் உடல் ஆரோக்கியத்துடன், மனமகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். மகிழ்ச்சியான சமுதாயத்தை வளர்த்தெடுக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டு, மனமகிழ்ச்சியுடன் வாழும் பெண்கள் வாழ்க்கையில் புதுமைப் பெண்களாக மிளிர்வார்கள்.
புதுவை ஆளுநர் மாளிகையில் ஒரு சகோதரி உள்ளார் எனக் கருதி, உங்களது குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். பிரச்சினைகளை சரிசெய்யவே நான் ஆளுநராக இங்கு வந்துள்ளேன் என்றார் ஆளுநர் தமிழிசை.
தொடர்ந்து ஆளுநர், சாதனை படைத்த புதுவையைச் சேர்ந்த மகளிருக்கு விருது வழங்கி பாராட்டினார்.