ஒரு நிமிட வாசிப்பு

மியான்மரில் நிலைமையை கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

செய்திப்பிரிவு

மியான்மரில் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ மியான்மரில் நடப்பவை கவலையளிக்கக் கூடிய வகையில் உள்ளது. நாங்கள் எங்களது நட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் நிலவரத்தை கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நேற்று முன் தினம் மட்டும் 38 பேர் பலியாகினர். இதுவரை ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 50 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மியான்மர் ராணுவ வீடியோ பக்கங்கள் யூடியூப் சேனலில் முடக்கப்பட்டுள்ளன.

என்ன நடக்கிறது மியன்மரில்?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங்சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT