வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே சுவர்களில் சின்னங்கள் வரைந்து பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு தொகுதியை கேட்டுப்பெற முயற்சித்தபோதும், அனைத்து தொகுதிகளிலும் திமுக வேபோட்டியிட முனைப்பு காட்டிவருகிறது.
சென்னையில் திமுக கட்சித்தலைமையில் நடந்த நேர்காணலில் பங்கேற்று திரும்பியவர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுவர்களின் சின்னங்களை வரைந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர்.
ஆத்தூர் தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்றவர் முன்னாள் அமைச்சரும் திமுக மாநில துணைப்பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி. இவர் இந்தமுறையும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இதையடுத்து தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம், புதுச்சத்திரம் பகுதிகளில் உதயசூரியன் சின்னம் வரையும் பணி தொடங்கியுள்ளது. பிற கட்சிகள் தொகுதி பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னரே திமுகவினர் கிராமப்புறங்கள் முழுவதும் தங்கள் சின்னத்தை வரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்ற அர.சக்கரபாணி, தேர்தல் அலுவலகம் திறப்பிற்கான பணிகளை தொடங்கிவிட்டு கிராமம் கிராமமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.