விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. தேர்தலின்போது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ன. அதில் எவ்வாறு வாக்களிப்பது, பொது மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்துகொள்ளும் விதமாக விவி பேடு எனப்படும் உறுதிசெய்யும் இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது.
வாக்களிப்பின் போது வாக்காளர்கள் குழப்பமின்றி தெளிவாக வாக்களிக்கச் செய்யும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகர், அருப்புகோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.
அப்போது, வேட்பாளரை தேர்வு செய்து வாக்களிக்கும் முறை, வாக்களித்ததை உறுதி செய்து கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.