சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆவணத்தைக் காட்டியும் தேர்தல் அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த வள்ளிநாயகி இன்று காரில் காரைக்குடிக்கு வந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் சாலையில் வந்தபோது காரை வட்டாட்சியர் நேரு தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனையிட்டனர்.
காரில் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்நிலையில் ஆவணத்தைக் காட்டியும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக வள்ளிநாயகி புகார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: எங்களது உறவினர் திருமணம் 3 மாதங்களில் நடக்க உள்ளது. தற்போது நகை விலை குறைந்திருப்பதால் காரைக்குடியில் நகை வாங்க ரூ.2 லட்சம் கொண்டு வந்தோம்.
அதிகாரிகள் சோதனையிட்டபோது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்ததற்கான ஆவணத்தைக் காட்டினோம். ஆனால் அதை ஏற்காமல் பணத்தைப் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டனர்.
பணம் ஒருவாரத்திற்குப் பிறகு தான் கிடைக்கும் என்கின்றனர். பணத்தை வாங்க நாங்கள் மீண்டும் வர வேண்டியுள்ளது. அதற்குள் நகை விலையும் கூடிவிடும், என்று கூறினர்.
இதுகுறித்து வட்டாட்சியர் நேரு கூறுகையில், ‘பறிமுதல் செய்தபோது ஆவணம் காட்டவில்லை,’’ என்று கூறினார்.
இதேபோல் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் பெரும்பாலும் சாதாரண பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். இதனால் முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் காட்டுவதற்கு சிறிதுநேரம் அவகாசம் கொடுக்கலாம்.