திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழாவில் பத்தாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாசித் திருவிழா:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு மாசித் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மேலும், கடந்த 23-ம் தேதி சுவாமி சிவப்பு சாத்தி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவும், 24-ம் தேதி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது.
தேரோட்டம்:
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் நாளான இன்று நடைபெற்றது. காலை 7.05 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு 7.35 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளித் ரதத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 8.25 மணிக்கும் நிலைக்கு வந்தது. அதன்பின் காலை 8.30 மணிக்கு தெய்வானை அம்மன் கோ ரதத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து காலை 9 மணிக்கு நிலைக்கு வந்தது.
ஆண்டுதோறும் மாசித்திருவிழா தேரோட்டத்தின்போது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடனும் பெரிய தேரில் வீதியுலா வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பெரிய தேர் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
தேரோட்டத்தில் திருக்கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன், தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தி.தனப்ரியா, திருக்கோயில் உதவி ஆணையர் வே.செல்வராஜ், கண்காணிப்பாளர்கள் கோமதி, ராமசுப்பிரமணியன், திருவிழா பிரிவு பிச்சையா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 11-ம் நாளான இன்று (பிப். 27) இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 12 நாட்கள் நடைபெறும் மாசித் திருவிழா நாளையுடன் நிறைவு பெறுகிறது.