ஒரு நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை ஏற்படுமா?- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், கரோனா இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இந்தியாவின் சில மாநிலங்களில் கரோனாவின் தாக்கம் சிறிது அதிகமாகிக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள்து.

தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா வைரஸைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கிறோம். பிரேசில், யுகே, தென் ஆப்பிரிக்கா ஆகிய வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கு ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். வெளிநாட்டில் இருந்து வருபவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். குறிப்பாகத் தமிழகம் முழுவதும் காய்ச்சல் கண்காணிப்பு முகாம்களை அதிகப்படுத்தியுள்ளோம்.

கரோனா இரண்டாவது, மூன்றாவது அலைகள் வர தமிழகத்தைப் பொறுத்தவரை வாய்ப்புகள் இல்லை. ஆனாலும், இரண்டாவது அலை வரும் வாய்ப்பு உருவாகாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது மிக மிக அவசியம்.

விலை மதிப்பில்லாத உயிரைக் காக்க முகக் கவசத்தை அணிய வேண்டும் என்று அனைவரிடமும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT