ஒரு நிமிட வாசிப்பு

ஸ்டாலின் மக்களுக்காகப் போராடி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்: டி.ஆர்.பாலு உருக்கம்

செய்திப்பிரிவு

திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்காகப் போராடி சிறைக்குச் சென்று சித்திரவதையை அனுபவித்தவர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை, அம்பத்தூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நேற்று (பிப்ரவரி 23-ம் தேதி) இரவு திமுகவினர் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய டி.ஆர்.பாலு, ''அந்தக் காலத்தில் எல்லாம் திமுக தலைவராக அவர் (ஸ்டாலின்) வருவார், பொருளாளராக நான் வருவேன் என்று எதிர்பார்த்ததில்லை. அப்படியே தொடர்ந்து எதையும் எதிர்பார்க்காமல் சிறைகள், சித்திரவதைகள் அனைத்தையும் இருவருமே அனுபவித்து இருக்கிறோம்.

ஏறத்தாழ சுமார் 25 முறைக்கு மேல் ஸ்டாலின் சிறைக்குச் சென்று மக்களுக்காகப் போராட்டங்களைச் செய்திருக்கிறார். ஒரு வாரம், 15 நாட்கள், 1 மாதம், 3 மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். ஏன் ஒரு வருடம் கூட சென்னைச் சிறையில் நானும் அவரும் இருந்திருக்கிறோம்.

அவர் ரத்த சிந்தியதெல்லாம் வீர வரலாறு. அதெல்லாம் பலருக்கும் தெரியாது. ஏன் கட்சியில் உள்ள இளைஞரணித் தோழர்களுக்குக் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை'' என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT