சசிகலாவுடன் தனியாகக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக இல்ல நிர்வாகியின் திருமண விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார்.
அப்போது அதிமுக கூட்டணி குறித்தும், சசிகலாவுடன் தனியாகக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்பது குறித்தும் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ''பாஜகவின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதுபோல எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அதிமுக.
அதிமுக எல்லோரின் முன்னும் நிலைநிறுத்தி இருக்கும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி. அவர்தான் இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் உள்ளார். அவரை முன்னிறுத்தி நாங்கள் தேர்தல் களத்திற்குச் செல்கிறோம். தனிப்பட்ட வகையில் எந்தவொரு தனி மனிதரிடமும் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை.
நாங்கள் அதிமுக என்கிற மிகப்பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். சசிகலா வந்திருக்கிறார். அவர் (அதிமுகவில்) சேர்வாரா, அதன் மூலமாக ஏதாவது மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சசிகலாவுடன் தனியாகக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை.
அவர்களின் இணைப்பு குறித்தும் நாங்கள் எதுவும் முயற்சி செய்யவில்லை. எங்களுக்கு அதுபோன்று செய்ய வேண்டிய அவசியமும் இல்லை'' என்று அண்ணாமலை தெரிவித்தார்.