தென் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் சின்ன வெங்காயம் விலை ‘திடீரென்று’ கடுமையாக உயர்வதும், பிறகு குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது.
தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சத்தமில்லாமல் சின்ன வெங்காயம் விலையும் சத்தமில்லாமல் உயர்ந்து வருகிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ 50க்கும், சின்ன வெங்காயம் ரூ.130க்கும் இன்று விற்பனையானது.
அதுபோல், திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.52, சின்ன வெங்காயம் ரூ.130க்கும் விற்பனையானது. சில்லறை விற்பனைக் கடைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150க்கு மேல் விற்பனையாகுவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன் சின்ன வெங்காயம் கிலோ 150 வரை உயர்ந்தது. கடந்த 2 நாட்களில் ரூ.20 விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ‘‘தற்போது சின்னவெங்காயம் முன்பிருந்த விலையைக் காட்டிலும் குறைந்து வருகிறது.
இனி விலை கூடுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், மழைக்காலம் வந்தால் மட்டுமே சின்ன வெங்காயம் வரத்து குறைவாகி விலை கூடும். ஆனால், தற்போது வெயில் காலம் ஆரம்பித்துள்ளதால் விலை உயர வாய்ப்பில்லை, ’’ என்றார்.