புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்குக் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநராக நேற்று அவர் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தமிழிசை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று மாலை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ''தமிழிசை சவுந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம். இப்போது அவர் மத்திய பாஜக அரசால், குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பேரில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
பெட்ரோல் விலை உயர்வை அனைவருமே எதிர்கொள்கிறோம். பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. விலையைக் கட்டுக்குள் கொண்டு வருமாறு பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்'' என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.