பிரதிநிதித்துவப் படம். 
ஒரு நிமிட வாசிப்பு

கோவையில் பிப்.21-ம் தேதி ஜல்லிக்கட்டு: 12 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் காண ஏற்பாடு

க.சக்திவேல்

கோவை செட்டிபாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் வரும் 21-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து, கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கத் தலைவர் எஸ்.பி.அன்பரசன் இன்று (பிப்.18) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"போட்டியைப் பாதுகாப்புடன் பொதுமக்கள் பார்வையிடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடிபட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் 750 மாடுபிடி வீரர்கள், 1,000 காளைகள் பங்கேற்க உள்ளனர்.

வெற்றிபெறும் மாடுபிடி வீரர்கள், மாடுகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதுதவிர, கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது. சிறந்த மாடுபடி வீரர், மாட்டுக்கு முதல் பரிசாக மாருதி கார் வழங்கப்பட உள்ளது.

கரோனா பரிசோதனைச் சான்றுடன் வரும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் அமரும் இடமும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 20 ஆயிரம் பேர் அமர்ந்து காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடப்பாண்டு 12 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் போட்டியைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டும் 300க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க உள்ளன. பார்வையிட வரும் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு, குடிநீர் ஆகியவை அளிக்கப்பட உள்ளன".

இவ்வாறு எஸ்.பி.அன்பரசன் கூறினார்.

SCROLL FOR NEXT