சுமார் ஒரு வருடத்துக்குப் பிறகு வடகொரிய அதிபர் கிம்மின் மனைவி பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்று இருக்கிறார்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ கடந்த வருடம் லுனார் புத்தாண்டின்போது கிம்மின் மனைவி ரி சோல் ஜு பொது நிகழ்வில் பங்கெடுத்தார். அதனைத் தொடர்ந்து ஒரு வருடமாக அவர் எந்த பொது நிகழ்விலும் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வதந்திகள் எழுந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு புதன்கிழமை கிம்மின் தந்தை பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொண்டார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
கரோனா வைரஸ் காரணமாகவே ரி சோல் ஜு பொது நிகழ்வில் கலந்து கொள்ள வில்லை என்று வடகொரியாவின் புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புக்கு மூத்த அதிகாரிகளை அதிபர் கிம் ஜோங் உன் கடுமையாக விமர்சித்தார்.
முன்னதாக, ‘‘கடந்த ஐந்து வருடங்கள் நாட்டிற்கு மோசமான காலமாக இருந்தது, அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரம் சரிந்துள்ளது, இதனை நாங்கள் ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய இருக்கிறோம்’’ என்று கிம் தெரிவித்திருந்தார்.
உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அதிபர் கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் தனது ஆட்சியில் குறைகள் இருந்தால் தன்னை பொதுமக்கள் மன்னிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.