ஒரு நிமிட வாசிப்பு

4 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் மேற்குத் திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நாளை முதல் 3 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல சென்னை மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT