கரூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட சாலைபுதூரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. செல்லாண்டிபாளையம் பகுதியில் வடிகால் கட்டும் பணி காரணமாக குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டதால் சாலைபுதூர் பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை என்றும், மேலும், சுகாதாரமற்ற முறையில் அவற்றில் புழுக்கள் மிதப்பதாகவும், குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் அப்பகுதிப் பெண்கள் காலிக் குடங்களுடன் கரூர் திருமாநிலையூர், சுக்காலியூர் இடையேயான மதுரை பழைய புறவழிச்சாலையான சாலைபுதூரில் இன்று (பிப். 18) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த தாந்தோணிமலை போலீஸார் மற்றும் நகராட்சி உதவி பொறியாளர் மஞ்சுநாத் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நாளை (பிப். 19) மாலை முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் தொடங்கும் என்றும், முன்னதாக இன்று மாலை லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனர்.
மறியலால் பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவன ஊழியர்கள் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அவ்வழியே செல்ல முடியாமல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.