நாட்டில் அனைத்துத் துறைகளும் கரோனாவால் முடங்கிக் கிடந்தபோது ஐடி துறை இயங்கியதாகவும், தேசப் பொருளாதாரத்தின் வலிமையான தூண்களில் தொழில்நுட்பத் துறையும் ஒன்று எனவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
நாஸ்காம் சார்பில் தொழில்நுட்பம் மற்றும் தலைமை மன்ற விழாவில் பிரதமர் இன்று கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா காரணமாக அனைத்துத் துறைகளும் முடங்கிக் கிடந்தபோது நீங்கள் (தொழில்நுட்பத் துறையினர்) 2 சதவீத வளர்ச்சியை அடைந்தீர்கள். வளர்ச்சியின் சந்தேகங்கள் எழுந்திருந்த நேரத்தில், இந்தியத் தொழில்நுட்பத் துறை 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்தை ஈட்டினால் அது நிச்சயம் பாராட்டத்தக்கது.
பெருந்தொற்றுக் காலத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அளித்து, தேசப் பொருளாதாரத்தின் வலிமையான தூண்களில் தொழில்நுட்பத் துறையும் ஒன்று என்று மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்.
உலகமே இந்தியாவை எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்மை நாமே வலிமைக் குறைவானவர்களாக நினைத்துவிடக் கூடாது. கரோனா காலத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் தன்னை நிரூபித்தது மட்டுமல்லாமல் அபரிமித வளர்ச்சியும் அடைந்துள்ளது.
ஒரு காலத்தில் சின்னம்மை தடுப்பூசிக்குக் கூட பிற நாடுகளை நாம் சார்ந்திருந்தோம். தற்போது இந்தியாவில் தயாரான கரோனா நோய்த் தடுப்பூசிகளைப் பல்வேறு நாடுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தியா உலகத்துக்கு அளித்த தீர்வுகள் உத்வேகம் அளிப்பதாக உள்ளன''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.