நாகரிகம் கருதியே தங்களுக்கு வழங்கப்படும் கையில் வேல் வாங்கிக் கொள்கிறோம் என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை, புளியந்தோப்பில் இன்று பேசிய அவர், ''ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்கள் கொள்கை. யார் மனதையும் புண்படுத்தமாட்டோம். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக இருந்த பெரியாருக்கு, குன்றக்குடி அடிகளார் திருநீறு கொடுத்தார்.
குன்றக்குடி அடிகளாரின் மனதைப் புண்படுத்தக் கூடாது, உணர்வை மதிக்க வேண்டும் என்று பெரியாரே திருநீறை எடுத்துப் பூசிக் கொண்டார். அதேபோலத்தான் வேல் கொடுத்தால் நாங்கள் வாங்கிக் கொள்வோம்.
நாகரிகம் கருதி, கொடுப்பவர்களின் உணர்வை மதிப்பதற்காகவே வேல் வாங்கிக் கொள்கிறோம். நாங்கள் என்ன வேல் வாங்கி நாக்கிலா குத்திக் கொண்டோம். நாங்கள் செய்யவில்லையே?
கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. எங்களை மீறி ஒரு சக்தி இருக்கிறது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவ்வளவுதான்'' என்று ஆ.ராசா தெரிவித்தார்.