திருநெல்வேலி மாவட்டத்தில் இடிந்தகரை, அலவந்தான்குளம் பகுதிகளில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம் கோரிக்கை மனு அளித்தார்.
மனு விவரம்:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதி ஊராட்சி இடிந்தகரை பகுதி முழுக்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கிறார்கள். அப்பகுதியை சேர்ந்த பலரும் வெளிநாடுகளிலும் பணிபுரிகிறார்கள்.
ஆனால் அப்பகுதியில் வங்கி சேவை இல்லை. இதற்காக கூடங்குளம், ராதாபுரம், வள்ளியூருக்கு 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோல் மானூர் தாலுகா அலவந்தான்குளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகமுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு கிராம வங்கி சேவை மட்டும் போதுமானதாக இல்லை.
எனவே இடிந்தகரை, அலவந்தான்குளம் பகுதிகளில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையை தொடங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.