இஸ்ரேலில் ஹலோசேட்டர் கரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “இஸ்ரேலில் கடந்த 24 மணி நேரத்தில் 6,754 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹலோசேட்டர் கரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளது. கரோனாவால் ஆபத்தான கட்டத்தில் இருந்த 20% நோயாளிகளுக்கு இந்த கரோனா தடுப்பு மருந்து பயன்பட்டது. இதில் 90% பேர் குணமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உருமாறிய கரோனா வைரஸ்
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.