ஒரு நிமிட வாசிப்பு

சொந்தத் தம்பிக்காகச் செலவு செய்யாத தினகரன் தொண்டர்களை எப்படிக் காப்பற்றுவார்?- புகழேந்தி கேள்வி

செய்திப்பிரிவு

சொந்தத் தம்பிக்காகச் செலவு செய்யாத தினகரன் தொண்டர்களை எப்படிக் காப்பற்றுவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கடந்த 27-ம் தேதி தண்டனைக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, அபராதத்தைச் செலுத்திச் சசிகலா, சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அதேபோல இளவரசி தரப்பிலும் அபராதம் செலுத்தப்பட்டது. ஆனால், சுதாகரன் விடுதலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இது தொடர்பாகச் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, ''சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறைக்குச் சென்றனர்.

ஆனால், திரும்பி வரும்போது சசிகலா, இளவரசி ஆகிய இருவர் மட்டுமே வெளியே வந்துள்ளனர். சுதாகரன் எங்கு போய்விட்டார்? டிடிவி தினகரனிடம் பணமா இல்லை?

தினகரன் ரூ.20 ஆயிரம் கோடி வைத்திருப்பதாக ஏற்கெனவே அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதில் இருந்து சொந்தத் தம்பிக்கு ரூ.10 கோடி செலவு செய்தால், தினகரன் என்ன குறைந்தா போய்விடுவார்?

சொந்தத் தம்பியையே காப்பாற்றிக் கூட்டிவர ஆர்வமில்லாத அவர், கட்சியில் உள்ள தொண்டர்களை எப்படிக் காப்பாற்றுவார்?'' என்று புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT