ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,019 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதார அமைப்பு தரப்பில் கூறுகையில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,019 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,98,216 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 77 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் 20 ஆயிரத்துக்கும் கீழே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மற்றும் மாஸ்கோவில் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92% பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.