ஒரு நிமிட வாசிப்பு

சசிகலா காலாவதியான மாத்திரை; மக்கள் ஏற்கவில்லை: வைகைச்செல்வன் பேச்சு

இ.ஜெகநாதன்

சசிகலா காலாவதியான மாத்திரை. அவரை மக்கள் ஏற்கவில்லை என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அதிமுக சார்பில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் வைகைச்செல்வன் கலந்துகொண்டு பேசும்போது, ''உலகத்திலேயே மக்களை மின் கம்பியில் துணியைக் காய வைக்கச் செய்தது திமுக ஆட்சிதான். திமுகவின் ஐந்தாண்டு சாதனை என்பது மின்வெட்டால் ஏற்பட்ட மக்கள்தொகை பெருக்கம்தான். மேலும், பெங்களூருவில் இருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார், அவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்கிறார் ஸ்டாலின். அப்புறம் எதற்கு நீங்கள் இருக்கிறீர்கள், கட்சியைக் கலைத்து விடுங்கள்.

எங்கிருந்தோ வருபவர் அதிமுகவைக் கைப்பற்றி விடுவார்களா? சசிகலா காலாவதியான மாத்திரை. காலாவதியான மாத்திரை நோயைக் குணப்படுத்தாது. பக்க விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். சசிகலாவைச் செயலாளராக அறிவிப்பதற்குத் தீர்மானம் எழுதி முதன்முதலில் வாசித்தவன் நான்தான். ஆனால், அதை மக்கள் எதிர்ப்பதால் ஏற்க முடியாது. இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் கட்சியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT