அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் மீண்டும் வெறிச்சோடி காணப்படுகிறது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் 8 மாதங்களாக குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது. குற்றாலத்தில் கடைகள் வைத்துள்ள வியபாரிகள், சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்யும் வாகன ஓட்டுநர்கள், விடுதி உரிமையாளர்கள் உட்பட பலதரப்பட்ட மக்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி முதல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழையில்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் அருவிகளில் நீர் வரத்து படிப்படியாகக் குறைந்தது.
பிரதான அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் குறைந்து வருகிறது. 2 மாதங்களுக்குள் குற்றாலம் மீண்டும் களையிழந்து காணப்படுகிறது.