பழநி கோயிலில் தங்கத் தொட்டில் வழிபாடு கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலில் தங்கத்தொட்டில் வழிபாடு வழக்கமாக நடைபெற்று வந்தது.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் கரோனா ஊரடங்கு காரணமாக இந்த வழிபாட்டுமுறை நிறுத்தப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வுக்கு பிறகே கோயிலில் பக்தர்கள் செல்ல கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் மலைக்கோயிலில் தங்கத்தொட்டில் வழிபாடு இன்று முதல் தொடங்கியது. தங்கத்தொட்டிலிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயில் இணைஆணையர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தங்கத்தொட்டில் வழிபாடு என்பது குழந்தைகளை மலைக்கோயிலில் உள்ள தங்கத்தொட்டிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆகும். ரூ.30 லட்சம் செலவில் பக்தர்கள் ஒருவர் தங்கத்தொட்டிலை கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கினார். அதிலிருந்து பழநி கோயிலில் தங்கத்தொட்டில் வழிபாடு நடைபெற்றுவருகிறது.