ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரெஸ் உத்தரகாண்டில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
இமயமலைப்பகுதியில் உள்ள ஜோஷி மடத்தில் நேற்று மிகப்பெரிய அளவில் பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டு பனிச்சரிவு நிகழ்ந்தது. இதனால், சமோலி மாவட்டத்தில் உள்ள அலோக்நந்தா, ரிஷிகங்கா ஆற்றில் திடீரென கட்டுக்கடங்கா வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதில் ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே 13.2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் (தபோவன் அணை) முழுமையாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த மின்திட்டத்தில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. இதுவரை 16 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.
இந்த நிலையில் பல்வேறு தரப்பினறும் உத்தரகாண்ட் விபத்துக்கு தங்கள் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, “ உத்தரகாண்ட் பனிச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கும், இந்தியாவுக்கும் எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.