ஒரு நிமிட வாசிப்பு

அருப்புக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியைக்கு கரோனா

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 388 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் 10ம் வகுப்பில் 28,710 மாணவ, மாணவிகளுக்கும், 12ம் வகுப்பில் 23,153 மாணவ மாணவிகளுக்கும் பயின்று வருகின்றனர். பள்ளிகளில் 90 சதவிகித மாணவ, மாணவிகள் வருகைப் பதிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பள்ளிகளிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிரிமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆசிரியர்களும் அவ்வாறே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான பாதிப்பு என்றாலும், அவரை 15 நாள்கள் விடுமுறை அளித்து தனிமையில் இருக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியபோது, ஆசிரியைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அவருக்கு பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, பள்ளி வளாகம் முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் முகக்கவசம் அணிந்தும், கைகளை சுத்தம் செய்துகொண்ட பின்னரும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னருமே வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT