விருதுநகர் பஜாருக்குள் பேருந்து இயக்கப்படுவதைக் கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலிலிருந்து தெப்பம் வரையிலான மெயின் பஜாரில் இருபுறமும் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
மதுரை- சாத்தூர் மாநில நெடுஞ்சாலையாக இருந்த பஜார் சாலையில் கடைகள் பெருக்கம் மற்றும் பொதுமக்கள் அதிக நடமாட்டம் காரணமாக பல ஆண்டுகளாக பஜார் சாலையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால், ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமானதால் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வந்தன.
இதற்கிடையே, பஜார் வழியாக மீண்டும் பேருந்துகளை இயக்க கோரிக்கை எழுப்பப்பட்டது. அதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் பஜார் சாலை வழியாக அருப்புக்கோட்டை, சாத்தூர் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால், பேருந்துகள் இயக்கப்படுவதால் பஜார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி பேருந்து போக்குவரத்தை தடைசெய்யக்கோரி பஜார் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், பஜார் வழியாக பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரியும், அருப்புக்கோட்டை, சாத்தூர் பேருந்துகள் முன்பு சென்றதுபோல் ஆத்துப்பாலம் வழியாக இயக்கக்கோரியும், போக்குவரத்து உதவி ஆய்வாளரைக் கண்டித்தும் கடைகளை அடைத்து இன்று காலை பஜார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பஜாரில் பேருந்து இயக்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதையடுத்து, பஜார் வழியாக பேருந்து இயக்க தடை விதிக்கக்கோரி பஜார் வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தனர்.