மின் வாரிய அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மின்வாரிய அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அயுப்கான் தலைமை வகித்தார். தொமுச கோட்ட செயலாளர் பெத்தேல், சிஐடியு கோட்ட செயலாளர் பச்சையப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார்மயம் ஆக்கக் கூடாது. மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும். நிறுத்தப்பட்ட பஞ்சப்படி, சரண்டர் ஊதியத்தை வழங்க வேண்டும். தரமான தளவாடப் பொருட்கள் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலயுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் காதர் மைதீன், குண சேகரன், பட்ட முத்து, இப்ராஹிம், விஜி , சித்திர கண்ணன், ராமர் உப்பிட்டோர் கலந்துகொண்டனர்.
தென்காசி கோட்டத்தில் மொத்தம் உள்ள 320 ஊழியர்களில் 146 பேர் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதாக நிர்வாகிகள் கூறினர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண வசூல் பாதிக்கப்பட்டது என்றும், மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.