நாடாளுமன்றம் | பிரதிநிதித்துவப் படம். 
ஒரு நிமிட வாசிப்பு

ரோஹிங்கியா முஸ்லிம்கள் 12 மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பிடிஐ

ரோஹிங்கியா முஸ்லிம்கள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்துவருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பிறகு பிப்ரவரி 1ஆம் தேதி 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில் இன்று மீண்டும் மாநிலங்களவை கூடியது. இதில் ரோஹிங்கிய குடியேற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

''சட்டவிரோதமாக குடியேறியவர்கள், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் எதுவும் இல்லாமலும் ரகசியமாக நுழைகின்றனர். இதனால் நாட்டில் இதுபோன்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை குறித்து துல்லியமான தகவல்கள் இல்லை.

சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கியாக்கள் தற்போது இந்தியாவில் பெரும்பாலும் ஜம்மு-காஷ்மீர், தெலங்கானா, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தங்கியுள்ளனர்.

தேசிய குடியுரிமை பதிவேடு சரிபார்ப்பு செய்யப்பட்ட பிறகு மியான்மரில் இருந்து வந்துள்ள ரோஹிங்கியாக்கள் உட்பட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏப்ரல் 24, 2014 மற்றும் ஜூலை 1, 2019 ஆகிய தேதிகளில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்துவது மற்றும் திருப்பி அனுப்புவது தொடர்பான ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT