கிராம சபைக் கூட்டம் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, திருவொற்றியூரில் அதிமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்கப் பொதுக் கூட்டம் நேற்று (பிப்.2) இரவு நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். கூட்டத்தில் அவருக்கு வீர வாளும் செங்கோலும் பரிசாக அளிக்கப்பட்டன.
அப்போது பேசிய ஓபிஎஸ், ''அதிமுக ஆட்சியில் தமிழ் மொழிக்காக ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக ஆட்சியில் தமிழகத்துக்குக் கேடான திட்டங்களை அவர்கள் தடுக்கவில்லை.
ஸ்டாலின் வண்ண வண்ண ஆடைகளை அணிந்து கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார். கிராம சபைக் கூட்டங்களை மாவட்ட ஆட்சியரும் பிற அதிகாரிகளுமே நடத்த வேண்டும். ஆனால் ஸ்டாலின் சம்மணங்கால் போட்டு அமர்ந்து, கிராம சபைக் கூட்டம் நடத்துகிறார். இவர் என்ன மகாத்மா காந்தியா?'' என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.