ஒரு நிமிட வாசிப்பு

பரிசீலனையில் கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு: டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அரசு பதில்

செய்திப்பிரிவு

பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு, நேற்று (02.02.2021) மக்களவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான (கிரீமிலேயர்) வருமான வரம்பை ஆண்டிற்கு எட்டு லட்சம் ரூபாய் என்ற நிலையில் இருந்து உயர்த்தி நிர்ணயம் செய்யத் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் கிருசன் பால் குர்ஜரிடம் பிற்படுத்தபட்டோருக்கான (கிரீமிலேயர்) வருமான வரம்பை உயர்த்துவது எப்போது நடைமுறைக்கு வரும்?, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2015-ம் ஆண்டிலேயே வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்தப் பரிந்துரைத்ததா?, தனிநபர் வருமானம், மொத்த உற்பத்திப் பெருக்கம், பண வீக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதாரச் செலவுகள் ஆகிய பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, பிற்பட்டுத்தப்பட்டோருக்கான (கிரீமிலேயர்) வரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்று டி.ஆர்.பாலு கேள்விகளை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய இணையமைச்சர் கிருசன் பால் குர்ஜர், "தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கலந்தாலோசனைக்குப் பின்னர், பிற்படுத்தப்பட்டோர் (கிரீமிலேயர்) வருமான வரம்பை உயர்த்தும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT