சிங்கப்பூர் உருவாக்கப்பட்ட 1819ஆம் ஆண்டில் இருந்தே, கல்கத் தாவைத் தலைநகராகக் கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில்தான் இருந்தது. சிங்கப்பூரில் வங்காளிகள் அதிகளவில் வசித்தனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் காடுகளை அழித்துத் தேயிலைப் பயிரிடத் தொடங்கியபோது, அங்கு வேலை செய்ய வங்காளத்திலிருந்துதான் ஆள் எடுக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் சிங்கப்பூரில் அடிப்படை வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது.
அதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களி லிருந்து அதிகளவில் தொழிலாளர்கள் சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர். தொழில் செய்வதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்களும் உண்டு. நான் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்தவன். சிங்கப்பூரில் சீனர்களும் தமிழர்களும் அதிகளவில் வசித்தாலும், இதன் பூர்வகுடியினர் மலாய் இனத்தவர்தான்.
1963ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேயா, சாபா, சாரவாக் ஆகிய நாடுகளை இணைத்து மலேசியா நாட்டினை பிரிட்டிஷார் உருவாக்கினர். மலேசிய நாட்டில் சிங்கப்பூர் ஒரு மாநிலம். மலேசியாவில் தங்கள் நலன் புறக்கணிக்கப்படுவதாகச் சீனர்கள் போராடத் தொடங்கினர். இதனால் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு பிரிந்தது. இன்றைக்குச் சிங்கப்பூரில் பெரும்பான்மையினராகச் சீனர்கள் என்றாலும், மக்கள்தொகையில் மலாய் இனத்தவர்கள், இந்தியர்கள் குறிப்பிட்ட சதவீதம் இருக்க வேண்டும் என்பது அரசுக் கொள்கையாகப் பின்பற்றப்படுகிறது.
ஆங்கிலேயர் இருந்தவரைக்கும், பாதுகாப்பு சார்ந்த வேலைகள் தமிழர்களிடமும் சீக்கியர்களிடமும்தான் இருந்தன. அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து வேலைகளிலும் தமிழர்கள் அதிகளவில் பங்குபெற்றனர். சிங்கப்பூரை வலிமைமிக்க நாடாக உருவாக்கிய லீ குவான் யூ, 1954இல் முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டபோது, தமிழர்களின் வாக்குகளால்தான் வெற்றிபெற்றார். அவர் இறக்கும்வரை தமிழர்களின் ஆதரவு அவருக்கு இருந்தது.
சீனர்களுக்கு ஆங்கில மொழி தெரியாது. தமிழர்கள் ஆங்கில மொழியை விரும்பிக் கற்றுக்கொண்டதால், அவர்களுக்கு வேலைவாய்ப்பும் பலதுறைகளில் நிபுணத்துவமும் எளிதில் சொந்தமாகின. சிங்கப்பூரின் அதிபரான முதல் தமிழர் என்கிற பெருமைக்குரியவர் எஸ்.ஆர்.நாதன். சமூகப் பணியில் பட்டயப்படிப்பை முடித்த அவர், அரசு ஊழியராக, அதிகாரியாகப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்படச் செய்தவர்.
தற்போதைய அதிபரான தர்மன் சண்முகரத்னம் பொருளாதார வல்லுநர். தற்போது சட்டத்துறை அமைச்சராக இருக்கும் கா.சண்முகம் சட்ட வல்லுநர். தற்போது பிரதமர் அலுவலக அமைச்சர், நிதி - கல்வித் துறைகளின் இரண்டாவது அமைச்சர் ஆக உள்ள இந்திராணி ராஜா, சிங்கப்பூருக்கு வெளியே ஏற்படும் வர்த்தகத் தகராறுகள் குறித்து வழக்காடுவதில் வல்லுநர்.
1959ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியில் பல தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். அவர்களில் பத்திரிகையாளரான சின்னதம்பி ராஜரத்தினம் கலாச்சாரத் துறை அமைச்சராகவும், 1965 முதல் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் சிறப்பாகப் பணிபுரிந்தவர். ஒருகாலத்தில் சிங்கப்பூர் சீனர்களின் நாடாகவே கருதப்பட்டது. இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல இனத்தவர் வாழும் நாடு என்கிற புரிதலை ஏற்படுத்தி சிங்கப்பூருக்கான அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தது.
ஆசிரியர் பணியிலும் தமிழர்களை அதிகளவில் காண முடியும். சிங்கப்பூரில் அரசுக் கல்வி நிறுவனங்கள் செல்வாக்குடன் உள்ளன. மக்களுக்குத் தரமான பள்ளிக்கல்வியும் உயர்கல்வியும் குறைவான கட்டணத்தில் கிடைப்பதில் அரசு எப்போதும் கவனம் செலுத்துகிறது. படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் உண்டு. சிங்கப்பூரைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வெளிநாடுகளில் தனி மதிப்பு உள்ளது. இதிலும் தமிழர்கள் முன்னிலையில் உள்ளனர்.
சிங்கப்பூர் தொழிற்சங்க இயக்கங்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. தொடக்கத்திலிருந்தே தொழிற்சங்க நடவடிக்கைகளில் முக்கியமான பொறுப்புகளிலும் அதிக எண்ணிக்கையிலும் தமிழர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கோ.சாரங்கபாணி தொடங்கிய ‘தமிழ் முரசு’ நாளிதழ் தமிழ் மொழியை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசென்றதோடு, தொழிற்சங்க இயக்கங்களுக்கும் துணைநின்றது.
அரசு அதிகாரியான ஜோசப் யுவராஜ் பிள்ளை, சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின்னர், அதன் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவப்பட்டதில் இவரது பங்களிப்பு முதன்மையானது. மகளிர் மருத்துவ வல்லுநர் எஸ்.எஸ்.ரத்னம், பாரம்பரிய இந்திய நடனக்கலைகளில் வல்லுநரான நீலா சத்தியலிங்கம் எனச் சிங்கப்பூர் தமிழ் ஆளுமைகளின் பட்டியல் நீளமானது. சிங்கப்பூரில் தமிழர் பெற்ற முக்கியமான உரிமை, தமிழ் ஆட்சி மொழியாக இருப்பதுதான்.
- அ. வீரமணி, சமூக அறிவியல் பேராசிரியர்