நிகழ்வுகள்

இரண்டு நாடுகளின் கலைகள் சங்கமிக்கும் ‘ராமாயணம்’ | சிங்கா 60 - சென்னையில் ஒரு திருவிழா

செய்திப்பிரிவு

சிங்கப்பூரின் 60ஆவது தேசிய நாளை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’, ‘பிசினஸ் லைன்’ ஒருங்கிணைப்பில் ஆகஸ்ட் 1 முதல் 10 வரை ‘சிங்கா 60’ கலைத் திருவிழா சென்னையில் நடைபெறுகிறது. இதன் ஓர் அங்கமாக சிங்கப்பூர் ‘அப்சராஸ் நடன நிறுவனம்’ சார்பாக ஆகஸ்ட் 8 – 9 ஆகிய இரண்டு நாள்களும் சென்னை கலாக்‌ஷேத்ராவில் ‘கம்பராமாயணம்’ நாட்டிய நாடகம் நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான கலை - பண்பாட்டுப் பரிமாற்றத்தைப் பறைசாற்றும் வகையில் இந்த நடன நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கலாக்‌ஷேத்ராவில் பரத நாட்டியம் பயின்ற சத்தியலிங்கம் - நீலா சத்தியலிங்கம் தம்பதியால் சிங்கப்பூரில் 1977இல் ‘அப்ரசாஸ் நடனப் பள்ளி’ தொடங்கப்பட்டது. இவர்கள் கலாக்‌ஷேத்ராவில் ருக்மிணி அருண்டேல் தலைமையின் கீழ் நடன ஆசிரியர்களாக 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்கள்.

அப்சராஸ் நடனப் பள்ளியில் பயின்றவர்களுக்குப் பகுதிநேர – முழுநேர வேலை வழங்கும் பொருட்டு ‘அப்சராஸ் கலை நிறுவனம்’ உதயமானது. இந்த நிறுவனம் சார்பாக பரதம் மட்டுமல்லாமல் இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கலை வடிவங்களையும் ஒன்றிணைத்து நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சிங்கா60 கலைத் திருவிழாவையொட்டி சென்னை கலாக்‌ஷேத்ராவில் அப்சராஸ் கலை நிறுவனம் சார்பாக சென்னை கலாக்‌ஷேத்ராவில் நடைபெறவுள்ள ராமாயண நாட்டிய நாடகக்தை எழுதி இயக்கியவர் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி.

2005 முதல் அப்சராஸின் கலை இயக்குநராகச் செயல்பட்டுவரும் இவர், தேர்ந்த பரத நாட்டியக் கலைஞர். நாட்டிய கலா கேசரி வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதத்தையும் சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற கல்பகம் சுவாமிநாதனிடம் வீணையும் பயின்றவர்.

தனது மானசீகக் குருவாக பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தைக் குறிப்பிடுகிறார். சிங்கப்பூரில் 55 விதமான கலைகள் உள்ளன. இந்தக் கலைகளில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கும் கலைஞருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருதான கலாச்சாரப் பதக்கத்தை அரவிந்த் குமாரசாமி பெற்றிருக்கிறார். கம்பராமாயண ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட இவருக்கு சுதா சேஷய்யன் வழிகாட்டி உதவியதாகக் குறிப்பிடுகிறார்.

கலாக்‌ஷேத்ராவில் நடைபெறவுள்ள நாட்டிய நாடகம், இந்தியா - இந்தோனேசியா ஆகிய இரண்டு நாடுகளின் ராமாயணத்தையும் தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த நாட்டிய நாடகம் நடத்தப்பட்டுவந்தாலும் இந்தியாவில் இதுதான் முதல் முறை.

“இந்தோனேசியாவிலும் ராமாயணம் உண்டு. அதன் கதை, வழிமுறைகளோடு கம்பரின் ராமாயணப் பாடல்களை இணைத்து இந்த நடனத்தை வடிவமைத்திருக்கிறோம். சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் நடனக் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள். சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற மூத்த பரத நாட்டியக் கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணன் சீதையாகத் தோன்றுகிறார்.

நான்கு இளவரசர் பிறப்பில் தொடங்கும் கதை, சீதை அபகரிப்பு, தேடல், அனுமன் சந்திப்பு, சுந்தர காண்டம், சீதை சந்திப்பு, சூடாமணியை வாங்குதல் என்று வளர்ந்து யுத்தத்தோடு நிறைவடையும். இந்தோனேசிய ராமாயணத்தில் ராமர் பட்டாபிஷேகம் இல்லை என்பதால் யுத்த காண்டத்தோடு நடனம் நிறைவுபெறும்” என்று சொல்கிறார் அர்விந்த்.

இரண்டு கலாச்சாரங்களையும் இணைக்கும்பொருட்டு இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் கமலான் என்கிற இசைக் கருவியும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இதற்கு இசையமைத்துள்ளார். நடன வடிவமைப்பு, மோகனப்பிரியன் தவராஜா.

தமிழகக் கலைஞர்கள் அபிஷேக் ரகுராம், கவிதா நரசிம்மன் இருவரின் கைவண்ணத்தில் ஆடை, ஆபரண வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவின் காஞ்சிப் பட்டோடு இந்தோனேஷியாவின் ‘பத்திக்’ வகை துணியையும் இணைந்து ஆடைகள் வடிமைக்கப்படுள்ளன. கதாபாத்திரத்துக்கு ஏற்ப ஆடைகளின் நிறம் மாறும். மிதிலை, அயோத்தி, அசோகவனம் என ஒவ்வொரு இடத்துக்கு ஏற்ப சீதையின் ஆடைகளின் வேலைப்பாடுகள் அமைந்திருக்கும்.

“கையால் வரைந்த ஓவியங்களுக்கு இடையே தொழில்நுட்ப உதவியோடு அனிமேஷன் படங்களை இணைத்திருக்கிறோம். குறிப்பாக அனுமன் விஸ்வரூபத்தை 3டி அனிமேஷனில் பிரம்மாண்டமாகக் கண்டு ரசிக்கலாம்” என்று நடன அமைப்பு குறித்து விவரிக்கிறார் அரவிந்த் குமாரசாமி.

SCROLL FOR NEXT